தற்போதெல்லாம் தோண்டி எடுக்கப்படும் சமுதாய சிதிலங்களும், அடையாளங்களும்,அக்கால மனிதர்கள் மிக நாகரீகமாகவும்,அறிவுப்பூர்வமாகவும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கிறது. நாம் வாழும் இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் ,இக்கருத்து நூறு சதவீதம் உண்மை என்று தோன்றுகிறது. வானவியல் அறிஞர்களும்,தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் மிகவும் வியந்து போற்றும் கலாச்சாரம், மாயன் கலாச்சாரம். இவர்களின் கட்டிடங்கள்,சாஸ்திர சம்பிரதாயங்கள், இலக்கியங்கள்,கணிதம் ,வானவியல் அறிவு என விரிந்து பரந்து காணப்படும் அறிவின் தீட்சண்யத்தில் இன்றைய மனித சமுதாயம் மிகவும் ஆச்சரியத்தோடு பார்க்கிறது. இன்னும் 10வருடங்களில் பூமிக் கோளம் அழிந்துவிடும் .மாயன் காலண்டரில் பூமிக் கோளத்தில் ஆயுள் கணக்கு முடிவு அடைகிறது என்று சிலர் புரளியைக் கிளப்பிவிட ‘மாயன்’ என்ற வார்த்தை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகிப்போனது. ‘மீசோ --அமெரிக்கன் நாகரீகம்’ என அழைக்கப்படும் மாயன் நாகரீகம் 2000 கி.மு----250 கி.பி (PRE CLASSIC PERIOD) ஆண்டுகளில் அதிக பட்ச வளர்ச்சி அடைந்திருந்தது. 250 கி.பி.---900 கி.பி (CLASSIC PERIOD)ஆண்டுகள் நாகரீகத்தின் உச்சகட்ட காலம் என தற்போதைய ஆய்வறிஞர்களால் அழைக்கப்படுகிறது. ஹோண்டுராஸ் ,கெளதமாலா, வட எல் சால்வடார் ,மத்திய மெக்ஸிகோ என கிட்டத்தட்ட 625 மைல்கள் விரிந்து பரந்து காணப்பட்டது. இதில் நக்பே ,எல்மிராடர் ,சிவல், மற்றும் சான் பார் டோலோ போன்றவை தென்மாயன் தாழ்நிலை பகுதிகளாகவும்(LOWLANDS) ,கமினல் ஜூவில், உயர்நிலைப் பகுதிகளாக(HIGH LANDS) துவங்குகிறது. தற்கால சுற்றுச் சூழல் பேரழிவுகள், மாயன் காலத்தில் கணித்து எழுதப்பட்ட வானவியல் சாஸ்திரங்களையும், காலண்டர்களையும் நினைவுக்குக் கொண்டு வருகிறது.தற்போது நடைபெறும் ,நடைபெற போகின்ற நிகழ்வுகளை சூசகமாகக் கணித்துக் கூறியுள்ளனர் என்கிறார் டாக்டர் .ரிச்சர்ட்சன் பி.பில். இவர் மாயன் காலத்தையும், அவர்களது நாகரீகத்தையும் சிறந்த முறையில் ஆராய்ந்து நூலாக்கியவர்.
மாயன் காலண்டர் ஏறத்தாழ 11 ஆகஸ்டு 3114 கி.மு.வில் தொடங்குகிறது.சூரியன் ,சந்திரன், மழை ,தீ என கிரகங்களும் ,ஐம்பெரும் பூதங்களும் தெய்வங்களாக வழிபடப்பட்டன. மாயன் காலண்டர் என்பது 17 வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் சூரிய காலண்டர் புகழ் பெற்றது. இது 360 நாட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே தற்கால காலண்டர் ஆராய்ச்சியின் மூல வேராகும். பண்டைய உலகின் மிக நாகரீகமான, சொகுசான கட்டிடக் கலை இவர்களுடையது. ஸ்டெப்டு பிரமிடுகள் மிகவும் புகழ்பெற்றவை. ஜோலியா குகை , நஜ் துனிக், கேலண்டிரியா குகை, மந்திரவாதி குகை,(CAVE SITES)போன்றவைகளிலிருந்தே ,இம்மக்களின் புனைவுகள்(MYTHS)அவதானிக்கப்படுகிறது. சியாபாஸ் மேல்நிலை பகுதி, இன்றும் பயன்பாட்டில் உள்ளது ,அதன் தரத்திற்கான சான்று. இந்நாகரீகம் அரசாட்சி முறையில் ஆளப்படவில்லை. யாரும் யாரையும் ஆளவில்லை. அவர்கள் ,சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தங்களுக்கென சட்டதிட்டங்கள் ,கலாச்சாரங்கள்,சடங்கு சம்பிரதாயங்களை வகுத்து கொண்டனர். ஒரு குழு மற்றொரு குழுவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொண்டதாக சாட்சியமில்லை. என்ன நேர்ந்தாலும் ,அதை மற்றவர்கள் கண்டுகொண்டதேயில்லை, ஆபத்தான நிலையிலும் கூட. இந்தக் கலாச்சாரம், கிளாசிக் காலத்தில் சற்று மாறத் துவங்கியது. அப்போது மிக பலம் கொண்ட அரசர்கள் தோன்றினர். அதாவது குழுவில் "தலைவன் பதவி" உருவாக்கம் கொண்டது. ஆட்சி முறை வடிவெடுத்தது. டிகால், காளாக்முல், காராகோல், டோஸ்பிளாஸ் போன்றவை பகுதிகளாக உருவாக்கம் பெற்று, ஒரு தலைமையின்கீழ் ஆட்சிக்கு வந்தது.அப்போதும் எந்த அரசனும், மற்ற அரசனின் ஆட்சி பகுதியில் உட்புகவில்லை.தனி சுதந்திர நாடுகளின் தொகுப்பாக மட்டுமே இருந்து வந்தது. தங்களுக்கென அவர்கள் உருவாக்கிய கட்டிடங்கள், நிர்வாகம், நாகரீகப் பொருட்கள் போன்றவை ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு ஆச்சரிய மூட்டும் விதமகவே உள்ளது. இவ்வாறான செய்கையின் மூலமே ஒருவர் மற்றவரை விட மேதமை பொருந்தியவர் என வெளிப்படுத்திக் கொண்டனர்.
மழை கடவுளின் மறு அவதாரமாகவே தண்ணீரைப் போற்றினர். அவர்களின் நீர் மேலாண்மை அறிவு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது. தற்போது தென் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குளம் ,இதற்கான சான்று. மழைநீர் சேமிப்பு குழாயோடு இணைக்கப்பட்டுள்ளது. ஓடும் தண்ணீரில் நீரூற்று,கால்வாய் போக்குவரத்து, கழிவு அறை சுத்தம் செய்ய குழாய் அமைப்பு போன்றவை அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரில் சியாபாஸ் இடத்தில் வீடுகள், மாளிகைகள், கோவில்கள் என ஆறாயிரம் சிதிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது கி.பி 100--800 வருடப் பழமையானது.இர்க் ஃபிரெஞ்ச் என்ற ஆய்வறிஞர் இதைக் கண்டறிந்தார். தண்ணீரை அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் இயல்பு ஓட்டத்தை தங்களுக்கு ஏற்ற வாறு மாற்றிக் கொண்டனர் என்பதைக் கண்டறிந்தார். அதற்காகப் பெரிய துளை, பின் அதைச் சிறியதாக மாற்றியது போன்ற கணித அறிவியல் அமைப்புகளும், வட்ட வடிவ கால்வாய் அமைப்பு , நீர் கடத்தியாகச் செயல்பட்டதையும் அவர் கண்டறிந்தார்.தங்கள் இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். தண்ணீர் மூலமாக சக்தி (POWER) திரட்டி அதைப் பல விதங்களிலும் உபயோகித்தனர். 216 அடி நீள வாய்க்கால், 20 அடி உயர நீர் வீழ்ச்சி , 150 மீ.தூரத்திற்குத் தண்ணீரைக் கடத்தியது , அதை விவசாயத்திற்காக ,பாசன அமைப்பாக மாற்றிக் கொண்டது போன்றவை இவர்களின் அசாத்தியமான நீர் மேலாண்மைத் திறனை வெளிப்படுத்துகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,பீன்ஸ், பாதாம்பருப்பு போன்றவை இவர்களின் தினசரி உணவாகவே இருந்து வந்துள்ளது. தவிர பூமிக்கடியில் சேமிப்புக் கிடங்கு தோண்டி ,உணவுப் பொருட்களைப் பாதுகாத்தனர். இது பஞ்சகால உணவுத் தட்டுப்பாட்டை நீக்கியது. ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைந்தனர்,சிற்பங்கள் செதுக்கினர், கலைக் கூடங்கள் அமைத்தனர், அணிகலன்கள் உருவாக்கினர். ஓவியங்களில் "டர்கிஷ் ப்ளூ " என்ற நீல வண்ணத்தை அதிகம் உபயோகித்தனர். இது ‘மாயன் நீலம்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.இளைஞர்கள் பச்சைக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்து பெண்களைக் கவர முற்பட்டனர். வெற்றி பெற்றவர்கள், காதலின் வெற்றி சின்னமாக ஓங்கிய கோபுரங்கள் கொண்ட " மீசோ --அமெரிக்கன்"கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோபுரங்களை மிகுந்த நுணுக்கத்துடன் செதுக்கினர். அதன் உச்சியில், குழுக்களின் இஷ்ட தெய்வ சிலைகள் பொருத்தப்பட்டன. இன்றும் இவ்வாறான கட்டிடங்களை காலாடுல், கோபா, கோபன், டிகால், உக்சல் போன்ற இடங்களில் காணலாம். இவைகளின் இருப்பையும் காலத்தையும் ரேடியோ கார்பன் முறையில் கண்டறிகின்றனர்.
மக்கள் தொகை பெருக்கம் மெதுவாக உணவுப் பஞ்சத்தைக் கொணரத் துவங்கியது. இதனால் சத்துக் குறைவு ஏற்பட்டதுடன், நோய்களும், தொற்று நோய்களும் உருவாகின. இவர்களின் வளர்ச்சி ,வெளிநாட்டுப் படையெடுப்புக்கு வழிவகுத்தது. குறிப்பாக ஸ்பானிய படையெடுப்பு மிகுந்த நாசத்தை உருவாக்கியது . மாயன் குழுக்களுக்கிடையே தொடர்பு இல்லாதது இப்போது மிகுந்த குறைபாடாக மாறிப் போனது. எனவே அந்நியர்கள் மிகவும் எளிமையாக இவர்களைத் தோற்கடித்தனர். மாயன்களின் முக்கிய வாணிப தடங்கள் அழிக்கப்பட்டன. விவசாயிகள் கோபம் கொண்டு தங்கள் குழுக்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்டனர். காலப் போக்கில் , இது பெரும் யுத்தமாகவே மாறிப் போனது. இயற்கைச் சீரழிவுக் காலநிலை மாறுபாடு என பல காரணிகள், பண்டைய நவ நாகரீக சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது.
No comments:
Post a Comment