Saturday, 28 July 2012

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!


அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

Wednesday, 28 March 2012

திருக்குறள் – சில தெரியாத செய்திகள்


என் பிரியமான தோழரே... இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





     திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....

1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.

2. திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்.

3. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர் .

4. திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு  செய்தவர் வீரமாமுனிவர்.

5. திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தின் (கி.பி. 1730) .

6. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

7. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் இயற்றியுள்ளார்.

8. திருக்குறள்,  தமிழ்மொழியின் முதல் எழுத்து ‘அ  வில் ஆரம்பித்து தமிழ்மொழியின் கடைசி எழுத்து  ‘ன் – இல் முடிந்துள்ளது.

9. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.


திருக்குறள் - நூல் அமைப்பு

நிலைகள்

கூறுகள்

எண்ணிக்கை
பால்
அறம்
பொருள்
இன்பம்
3
இயல்
பாயிரம்
இல்லறம்
துறவறம்
அரசு
அங்கம்
ஒழிபு
களவு
கற்பு
8
அதிகாரம்
4
20
14
25
32
13
7
18
133
குறள்
40
200
140
250
320
130
70
80
1330
nadri;pearl's collection


Friday, 23 March 2012

சமூக மருத்துவர் தந்தை பெரியார்


அவருடைய உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. ஏறத்தாடி 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக மக்களுக்காகத் தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நாள். மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரையில்கூட அவர் பொதுக்கூட்டங்களிலே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய இறுதிக்கூட்டம் அதே டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னையிலே இருக்கிற தியாகராயநகரிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சை ஒலிநாடாவிலே கேட்கிறவர்கள் ஒரு செய்தியைக் கவனிக்க முடியும். பேச்சுக்கு இடையிலே இடையிலே அவர் வயிற்று வலியாலே துன்பப்படுவதும், அந்தத் துன்பத்தை 'அம்மா அம்மா' என்கிற குரலில் அவர் வெளிப்படுத்துவதும், மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிற ஒரு நிகழ்வாக இருக்கும்.
periyar_28அவர் அம்மா என்று ஒலி எழுப்புவதுகூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அம்மா அம்மா என்று வயிற்றுவலியால் துடிக்கிற குரலாக இருக்காது. அம்ம்மா… அம்ம்மா என்று வயிற்றுவலியை அடக்குகிற குரலாகத் தான் இருக்கும். அவர் அப்படி வயிற்று வலியை ஒரு நாற்பது நிமிடங்கள் அல்லது 4 மணி நேரங்கள் அடக்கிக் கொண்டிருந்தார் என்று நாம் கருதக் கூடாது. 40 ஆண்டுகள் அந்த வயிற்று வலியோடு அவர் போராடிக் கொண்டிருந்தார். 1930… 40களிலே எல்லாம் கூட அவர் அந்த வயிற்று வலிக்காக மருத்துவமனைகளிலே அனுமதிக்கப் பட்டிருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்று குறிப்புக்களைப் பார்க்கிறபோது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
கடுமையான வயிற்றுவலியோடு ஏறத்தாடி 40 ஆண்டுகள் போராடிக் கொண்டு, இந்த மக்களுக்காக அறிவுப் பூர்வமாக செய்திகளையும் சொல்லிக் கொண்டிருந்த மாமனிதர் அவர். 1943ஆம் ஆண்டு அதாவது அவர் இறந்து போவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அதே வயிற்றுவலியினால் துன்பப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் என்ன செய்தார் என்பதை அன்றைக்கு அவருக்குத் தனிச் செயலாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 43-ஆம் ஆண்டு கடுமையான வயிற்று வலிக்காகக் சென்னையிலே இருக்கிற பொது மருத்துவமனையிலே ஐயா அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். டாக்டர் குருசாமி முதலியார் என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர், ஐயாவினுடைய உடல் நலத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். மிகக் கவனமாக மிகுந்த பாசத்துடன் அவரை அந்த மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று ஐயாவுக்கு நினைவு வருகிறது. நாளை சென்னையிலே இருக்கிற தியாகராய நகரில் பனகல் பூங்காவிற்கு அருகிலே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்கனவே அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மெதுவாக மருத்துவரை அழைத்து நான் இன்னும் எத்தனை நாள் இந்த மருத்துவமனையிலே இருக்கனுங்க… என்று கேட்கிறார். எப்படியும் ஒரு வாரமாவது நீங்க இருக்கணும், ஒரு நான்கு நாட்களாவது குறைந்தது இருக்க வேண்டியது இருக்கும் என்று சொல்கிறார்கள். அவருக்குக் கவலையாக இருக்கிறது. தோழர்கள் பணமெல்லாம் செலவு செய்து கூட்டத்தைப் பெரிய அளவிலே ஏற்பாடு செய்திருப்பார்களே, கூட்டத்திற்குப் போகாமல் எப்படி இருப்பது என்பதே அவருக்குப் பெரிய மன உளச்சலாக இருக்கிறது.
அடுத்த நாள் பெரிய மருத்துவரான டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அந்த மருத்துவமனையை விட்டுப் போனதற்குப் பிறகு, பக்குவமாக, அன்றைக்கு அங்கு மருத்துவரை அழைத்து ஒரு சின்னச் செய்தியை பெரியார் சொல்லுகிறார், "ஐயா, வீட்லே சில முக்கியமான பொருள்களையும், புத்தகத்தையும் எடுக்க வேண்டியதிருக்கு…" என்கிறார். உடனே அந்த மருத்துவர் யாரையாவது அனுப்பி எடுத்துவரச் சொல்லலாமா என்கிறார். இல்லீங்க நான் போனாத்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.
“இவர் போனாத்தான் கூட்டத்திலே பேச முடியும்” அதுதான் செய்தி. நான் போனாத்தான் எடுக்க முடியும், ஆகையினால நீங்க சீப் டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் ஒரு இரண்டு மணிநேரம் ஐயா அனுமதி கொடுத்தீங்கன்னா நான் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தர்ரேன், ரொம்ப முக்கியமான புத்தகங்க என்று சொல்கிறார். அந்த மருத்துவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அவர் வயதிலே இளையவர். பெரியவர் சொல்லுகிறபோது நாம் என்ன செய்வது.. சரி போயிட்டு ஒரு 2 மணி நேரத்துல வந்திருங்க என்று சொல்கிறார். நான் வந்திடுறேனுங்க. 8 மணிக்கெல்லாம் வந்திடுறேனுங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு நேராகப் பனகல் பூங்காவிற்கு வந்து கூட்டத்திலே கலந்து கொள்கிறார்.
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும், மக்களுக்கும் பெரிய மகிழ்ச்சி… ஆரவாரம். ஐயா பெரியார் பேசுகிறார், பேசத் தொடங்கிய பிறகு அவருக்கு அந்த நேரம் காலம் எல்லாம் நினைவிலே இல்லை. பேசிக்கொண்டே இருக்கிறார். ஏறத்தாற 10 மணி ஆகிவிட்டது. திடீரென்று தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது 10 மணி ஆகி விட்டதே என்ற பதற்றத்தோடு அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பவும் மருத்துவமனைக்கு வருகிறார். கொஞ்சம் தாமதமாக வந்து சேருகிறார். ஆனால் அடுத்த நாள் என்னாயிற்று என்றால், இவர் ரகசியமாக செய்த காரியம் பத்திரிகைகளிலேயெல்லாம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆவேசமான பேச்சு என்று செய்தியாக வெளியே வருகிறது.
அதைப் பெரிய மருத்துவர் குருசாமி முதலியார் பார்த்து விட்டு என்னடா இது, ஐயா பெரியார் மருத்துவமனையிலே இருக்கிறார். நேற்றைக்கு பனகல் பூங்காவிலே பேசினார் என்று செய்தி வருகிறதே என்று புரியாமல் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்குப் பொறுப்பிலே இருந்த மருத்துவரை, அந்த செவிலியர்களை எல்லாம் எப்படி நேற்று ஐயா கூட்டத்துக்குப் போனார், யார் அனுமதித்தீர்கள் என்று கேட்ட உடனே அவர்களெல்லாம் மிகவும் நடுங்கிப் போனார்கள். மருத்துவரும் மிகக் கோபமாக இருக்கிறார். ஐயாவைப் பார்க்கக்கூட வரவில்லை.
மறுபடியும் மதியம் இரண்டு மணிக்கு வருகிறபோது தந்தை பெரியார் அவர்கள் மருத்துவர் கோபமாக இருக்கிறார். மற்ற மருத்துவர்களையெல்லாம் கோபித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "ஐயா மன்னிச்சுக்கோனுங்க… நான்தானுங்க அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டேன். அந்த மருத்துவர் மேல தப்பில்லீங்க… நான்தானுங்க அந்தக் கூட்டத்துக்காக அப்படி ஒரு பொய்ய சொல்லிட்டுப் போயிட்டனய்யா… ஐயா கோவிச்சுக்கக் கூடாது" என்று சொன்னபோது, குருசாமி முதலியார் சொன்னாராம் "ஐயா உண்மையிலேயே கோபப்படுவது எதற்காக என்றால் நீங்க இன்னும் ரொம்ப நாள் வாழணும். இந்த நாட்டில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஆயிரம் இருக்கிறது.
எனவே உங்கள் உடல் நலம் பற்றிய கவலையிலதான்யா நான் சொல்றேன். உண்மையாகச் சொன்னா நான் மருத்துவரும் நீங்கள் நோயாளியுமல்ல… எனவே நீங்கள் நெடுநாள் இருக்க வேண்டும். நீங்கள் இருந்தால்தான் இந்த நாட்டுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது" என்று அவர் கவலைப்பட்டுச் சொல்லியுள்ளார்.
ஏறத்தாற 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்… வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக… மக்களுக்காக தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர்கள் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன. அவருடைய உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. சிலர் பொய் சொல்லிவிட்டு வெளியே போவார்கள். அவர்கள் வேறு வேறு நோக்கங்களுக்காகப் போவார்கள். ஆனால் பொதுநல நோக்கத்திற்காக, மக்களுக்காக மருத்துவமனையிலேயிருந்து வெளியே வந்து பொதுக்கூட்டத்திலே பேசி விட்டு மறுபடியும் போன மனிதர் ஐயா பெரியார் அவர்களாகத் தான் இருக்க முடியும்.
(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்  தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள்.   அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம்.  உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.  புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த  சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.  சிந்துவெளி நாகரிகம்:  சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.  நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.  சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:  1. ஆரியர் நகர  வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில்                உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர்.  நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர்.             கிணறு, குளியலறை,  கழிவு நீர் வடிகால் உள்ள             வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.  2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது.  கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.  ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.  3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும்             பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன.  ஆனால்             தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.  4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.  5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை             பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.  6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.  7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது.  சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.  8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109-            112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)  9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில்           இழிவாகச் சொல்லப்படுகின்றன.  10.       சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை.  ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )  11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம்     அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.             ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.  12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர்.  ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும்     குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.  ‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.  கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).  சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.  அண்மைக் காலங்களில்.   டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.  சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)  Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த  நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.  தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.  சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.  பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும்  உலக நாடுகளில் காணப்படும்  தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும்  எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்)  அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:  1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை,   வஞ்சி, தொண்டி வளாகம்”  புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்  'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.    சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.    புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.  சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.  எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.  சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்  பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.  பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.  எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.  நதிகள், மலைகளின் பெயர்கள்  நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.  கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.  பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.  தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.  இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.  இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.  தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:  2 - பூம்புகார்  அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.  18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.  ''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.  இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.  கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.  இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.  இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.  இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.  இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.  இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.  சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.  மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.  மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.  சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்  1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.  2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.  3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.  4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)  5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.  6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.  7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.  8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.  9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.  10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.  11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.  12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.  13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.  ஆய்வுகளின் நம்பகத் தன்மை:  1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.  2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.  3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.  4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.  5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,  ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.  6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.  7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.  ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:  1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.  2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு          வெளிப்பட்டது.  3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச்      செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.  4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.  5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர்             கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.  6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்             வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.  7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.  8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து      நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.  9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.  10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.  11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.  12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.  13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.  14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.  15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.  16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.  17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.  18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல்             பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி         ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).  19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.  (ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)  இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.  ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.  ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.  மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.  

ஐன்ஸ்ட்டீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறது!


அண்மையில் வெளிவந்த நியூட்ரினோ பற்றிய தகவல், பிரபஞ்சம், அணு முதலானவை பற்றி நாம் செய்து வைத்திருக்கும் கொள்கைகளை தகர்த்துவிடும் போலுள்ளது. ஒளியை விஞ்சும் வேகத்தில் நியூட்ரினோ பயணம் செய்திருக்கும் நிலையில், ஐன்ஸ்டினின் கோட்பாடுகளை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்யவும், டெலிபோர்ட்டேஷன் செய்யவும் இனிமேல் முடியலாம். புராண சம்பவங்களும், ஈரேழு லோகங்களும் நிஜமாகலாம்.
இந்தப் பேரண்டத்தில் ஒளியின் வேகம்தான் அதிகபட்சம். வினாடிக்கு 300,000 கி.மீ வேகத்தில் ஒளி பரவுகிறது. எந்தப் பொருளாலும் ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது. உண்மையில் அதை எட்டக்கூட முடியாது. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு அடிப்படையே இதுதான். குவாண்ட்ட அறிவியல் இதை அஸ்திவாரமாக வைத்து வளர்ந்தது.
அஸ்திவாரம் இப்போது ஆட்டம் கண்டுவிடும் போலிருக்கிறது. காரணம், சென்ற மாதம் வெளிவந்த ஒரு அறிவியல் அறிக்கை. அணுக்கருவில் இருக்கும் நியூட்ரினோ என்ற ஒருவகை துகள், ஒளியை விட வேகமாகப் பயணம் செய்திருக்கிறது.
பௌதிக விஞ்ஞானத்தின் அடித்தளம் ஆடுகிறது என்பதால், உலகம் உடனே அழிந்துவிடும் என்றோ, பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துவிடும் என்றோ உடனே பயப்பட வேண்டியதில்லை. சராசரி மனித வாழ்க்கைக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பினால் எந்தவித பாதிப்புமில்லை. விஞ்ஞானிகளுக்குத்தான் திண்டாட்டம். மொத்த அணு விஞ்ஞானத்தையும், பேரண்டவியலையும் ஆரம்பத்திலிருந்து புதிதாக மாற்றி எழுத வேண்டியிருக்கும்.
வேகத்தின் விதிமீறல்
இரண்டு இடங்களுக்கு இடையே தூரம் 730 கிலோமீட்டர். CERN என்ற ஆய்வுக்கூடம் ஸ்விட்சர்லாந்தில், ஜெனிவா என்ற இடத்தில் உள்ளது. நிலத்தடியில், 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ சுற்றளவில், ஒரு ஊரையே சுற்றிவளைக்கும் அளவுக்கு வட்டமான சுரங்கம்; அதில் அணுக்கருவின் துகள்கள், பந்தய குதிரைகளைப்போல விரட்டி, மோதவிடப்படுகின்றன. இங்கிருந்து 730 கிமீ தொலைவுக்கு அப்பால் OPER எனும் இன்னொரு ஆய்வகம் உள்ளது. இதன் கருவிகள் நிலத்தடியில் 1,400 மீட்டர் ஆழத்தில் (கிட்டத்தட்ட 1.5 கி.மீ ஆழம்) புதைக்கப்பட்டுள்ளன. இதன் வேலை நியூட்ரினோ எனும் அணுக்கரு துகள்களின் திசை, வேகம், அளவு போன்ற முக்கிய தகவல்களை அறிவது.
நடந்தது இதுதான். செர்ன் ஆய்வகத்திலிருந்து, நியூட்ரினோ துகள்களின் கற்றை, டார்ச் லைட்டின் ஒளிபோல் ஓபெர் கருவிக்கு அனுப்பப்பட்டது. ஓபெர் கருவி, நியூட்ரினோவின் வேகம் முதலானவற்றை அளந்தது. அளந்தபோது, நியூட்ரினோவின் வேகம், ஒளியின் வேகத்தைவிட அதிகமாக இருந்தது. ஒளி 730 கிமீ தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட 60 நேனோ செகன்டுகள் சீக்கிரமாகவே நியூட்ரினோ வந்தடைந்து விட்டது.
ஒருமுறை, இருமுறை அல்ல; கடந்த 2 ஆண்டுகளாக, 16,000 முறை இந்தச் சோதனை திரும்பத் திரும்ப செய்து பார்க்கப்பட்டது. இனிமேலும் பொறுக்க முடியாது என்று கருதி, உண்மையை உலகிற்கு சொல்லி விட்டார்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் பிரபலமான, பலமுறை நிரூபிக்கப்பட்டு, அசைக்க முடியாத அடித்தளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரவலாகப் பய‌ன்படுத்தப்பட்டு வரும் சார்பியல் கோட்பாட்டை உடைக்க யாருக்குத்தான் தைரியம் வரும். அறிவியலில் எந்தக் கோட்பாடும் நிரந்தர ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. உண்மையாக இருக்கும் வரை ஒரு கோட்பாடு பயன்பாட்டிலிருக்கும், சிறிது ஓட்டை விழுந்து விட்டாலும் அது தூக்கி வீசப்படும்.
நியூட்ரினோ
நியூட்ரினோ என்பது எலெக்ட்ரான் போன்ற ஒரு துகள். எலெக்ட்ரானுக்கு நெகட்டிவ் மின் ஏற்றம் உண்டு. நியூட்ரினோவுக்கு அது கிடையாது; எடையும் 10,000 மடங்கு லேசானது. சாதாரணமாக அணுவில் இது இருப்பதே தெரியாது. எலெக்ட்ரான்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்க, உள்ளே புரோட்டான், நியூட்ரான்களால் ஆன அணுக்கரு இருக்கும்... இதுதான் அணுவின் பொதுவான வடிவம். நியூட்ரினோவைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
நாம் நினைப்பதுபோல், புரோட்டானும் நியூட்ரானும் தனித் துகள்கள் அல்ல. அவற்றையும் உடைக்கலாம். அவையும் சிறு பொருள்களால் ஆனவையே. சில நேரங்களில் நியூட்ரான் தானாகவே உடைந்து, பிரிந்து புரோட்டனாக மாறிவிடும். அதன் மின் தன்மை, நியூட்ரல் நிலை கெட்டு பாசிட்டிவாகிவிடும். உடைவதற்கு முன்புவரை நியூட்ரானை நியூட்ரலாக இருக்க உதவிய, உள்ளே மறைந்திருந்த எலெக்ட்ரான் அணுக்கருவிலிருந்து உதைத்துத் கொண்டு வெளிப்படும். அதே சமயம் எலெக்ட்ரானுடன் ஜோடியாக நியூட்ரினோவும் வெளிப்படும். இந்தத் துகள்தான் ஒளியை விஞ்சும் வேகத்தில் பயணம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செர்ன் ஆய்வகத்தில் செயற்கையாக நியூட்ரினோக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மையில் நியூட்ரினோக்கள் அத்தனை அரிதானவை அல்ல. சமுத்திரத்தில் மீன்கள் நீந்துவதுபோல, நியூட்ரினோ சமுத்திரத்தில் நாம் ஒவ்வொரு வினாடியும் நீந்திக்கொண்டிருக்கிறோம். சூரியன், ஒளியையும் வெப்பத்தையும் தருவது மட்டுமன்றி, அடை மழைபோல் நியூட்ரினோவையும் நாலா பக்கமும் கொட்டுகிறது. நியூட்ரினோவுக்கு கிட்டத்தட்ட எடையே இல்லாததாலும் அணுக்களுடன் இது எந்தவித மின்காந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதததாலும், இதனால் எந்தவித பாதிப்பும் நமக்கு இல்லை. ஒவ்வொரு வினாடியும் 10 பில்லியன் நியூட்ரினோ துகள்கள் நமது கண் வழியாகப் புகுந்து தலைவழியாக வெளியேறிவிடுகின்றன. ஒரு சதுர சென்ட்டிமீட்டர் பரப்பிலேயே 10 பில்லியன் நியூட்ரினோக்கள் ஒரு வினாடி நேரத்தில் சூரியனிலிருந்து பூமிப்பரப்பில் விழுகிறது எனில், பூமியின் மொத்த பரப்பின் மீதும் எவ்வளவு கொட்டிக் கொண்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பூமியின் ஒரு பக்கம் நுழைந்து எதுவுமே நிகழாதது போல இவை மறுபக்கம் வெளியேறி விடுகின்றன. இந்தப் பேரண்ட வெளியில் ஒவ்வொரு நட்சத்திரமும் நியூட்ரினோவை வாரி இறைத்தபடி உள்ளன. குறிப்பாக நட்சத்திரம் வெடித்து சூப்பர் நோவா ஆக ஆகும் முன் கொள்ளை கொள்ளையாக நியூட்ரினோவை வீசும்.
நமது சூரியனிலிருந்து வருகின்ற நியூட்ரினோக்கள், ஆகாயத்தில் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற நியூட்ரினோக்கள், செயற்கையாக செர்ன் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் நியூட்ரினோக்கள் ஆகியவற்றைப் பிரித்து அறிவது கஷ்டம். எனினும் அறிய முடியும். எதிலும் பட்டும் படாமல், புகுந்து செல்லும் நியூட்ரினோவில் ஒரு சிறுபகுதி 'செரன்கோவ்' வெளிச்சத்தை, மின்மினிப்பூச்சி போல் பளிச்சிட்டு வெளிப்படுத்தும். இதற்காக பூமிக்கடியில் வேறு நியூட்ரினோ தொல்லை இல்லாத இடத்தில் 10,000 டன் அதிசுத்தமான தண்ணீர் நிரம்பிய தொட்டியையும் அதைச்சுற்றி ஒளிப்புள்ளிகளை காணும் கேமராக்களையும் வைப்பார்கள்.
சார்பியல் கோட்பாட்பாட்டின் எதிர்காலம்
சரி, நியூட்ரினோ ஒளியைவிட வேகமாக சென்றால் என்ன? செல்லக்கூடாதா? ஐன்ஸ்ட்டினின் சார்பியல் கோட்பாட்டின் ஆதாரமே ஒளியின் உச்ச வேக வரம்பு வேகம் பற்றியதுதான். மேலும் ஒளியின் வேகம்தான் சார்பற்றது எனவே அதை ஆதாரமாக வைத்துத்தான் மற்றவை சார்புடையவை என்று நிரூபிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தாலும் வினாடிக்கு 100,000 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் இரு சந்தர்ப்பங்களில் ஒளியின் வேகத்தை நீங்கள் ஒரே அளவாகத்தான் அளப்பீர்கள். நடைமுறையில் விஷயம் அப்படி இல்லை. அறுபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் மோட்டார் சைக்கிளில் இருப்பவருக்கு ஓரத்தில் ஒதுங்கி நிற்பவர்கள் 60 கி.மீ வேகத்தில் பின்னோக்கி நக‌ர்வதாகத் தெரிவார்கள். அதே சமயம் பக்கத்தில் 60 கிமீ வேகத்தில் ஓடும் பஸ், அவருக்கு அசையாமல் பக்கமாக நிற்பதுபோல தெரியும். அவர் கணக்குப்படி பஸ் நிற்கிறது; நிற்கின்ற பிளாட்பார ஆள் வேகமாக நகர்கிறார். இதே முறையில் நீங்கள் ஒளியை அளக்க முயன்றால் ஒளியின் வேகம் எல்லா நிலைகளிலும் மாறாமல் ஒரே அளவாகத்தான் இருக்கும். நின்றாலும், ஓடினாலும் அதன் வேகம் மாறாது. ஒளியின் வேகம் மாறாது என்பதால் மற்றவை மாறியாக வேண்டும். ஐன்ஸ்ட்டின், அளக்கின்ற உங்கள் அளவுகோளின் நீளமும், கடிகாரத்தின் டிக் டிக்கும் மாறும் என்கிறார்.
உங்கள் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும்போது உங்களின் (அடிக்கோல்) இடம் நசுங்கிவிடும், காலம் தளர்ந்து நிதானமாகிவிடும். இதுதான் சிறப்பு சார்பியல் கொள்கை. பொது சார்பியல் கொள்கையில் ஐன்ஸ்ட்டின், கிராவிட்டியின் இயல்பை விளக்குகிறார். இந்தக் கொள்கையிலிருந்து பிறந்ததுதான் E=MC2 என்ற பிரபலமான சம‌ன்பாடு. விஞ்ஞானம் பற்றி அக்கறையே இல்லாதவர்கள்கூட இந்த ஃபார்முலாவைத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த சம‌ன்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது c2எனும் குறி. C என்பது ஒளியின் வேகத்தைக் குறிப்பது. வினாடிக்கு 300,000 கி.மீ. இந்த அளவை அதனாலேயே பெருக்கினால் எத்தனை பெரிய எண் வருமோ, அதை பொருளின் நிறை(எடை)யால் பெருக்கினால் கிடைப்பது அந்தப் பொருளில் பொதிந்திருக்கும் சக்தியின் அளவு. ஒரே ஒரு கிராம் பொருளை, முழுவதும் சக்தியாக மாற்றினால் இந்த ஃபார்முலாவின்படி இந்தியாவுக்கு ஒரு நாளுக்கு வேண்டிய மொத்த மின்சாரத்தையும் பெற்றுவிடலாம். இதுதான் அணுசக்தி.
ஒளியின் வேகத்தை உச்சம் என்று கொள்ளும் வரைதான் இந்த ஃபார்முலா உண்மை. ஒளியின் வேகம் உச்சமில்லை எனில், பொருள்-சக்தி பற்றிய சமன்பாடு செல்லாது. மொத்த கால்குலேஷன்களையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். வேறு என்னென்ன அதிசயங்களை அந்த புதிய கால்குலேஷன் வெளிப்படுத்துமோ தெரியவில்லை. முழுவதையும் எப்போது நாம் அறியப்போகிறோம்? அறிதொறும் அறியாமைதானா?
ஏழுலகங்கள் உண்டா?
ஐன்ஸ்டினின் கோட்பாட்டை வேதங்களைப்போல போற்றிவந்த நிலையில், அது நிலைகுலைவதை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. நியூட்ரினோவின் விதிமீறலுக்கு மாற்று விளக்கம் தந்து ஐன்ஸ்டினைக் காப்பாற்ற தியரிட்டிகல் இயல்பியல் வல்லுநர்கள் முயலலாம்.
ஏற்கன‌வே 'தந்திக் கொள்கை' (இழைக் கொள்கை என்றாலும் சரியே) மேதைகள் வெட்ட வெளியில் மூன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதாவது நாமிருக்கும் இடத்திலேயே மேலும் ஏழு இடங்கள் மறைந்திருப்பதாக சொல்கிறார்கள். இடத்துக்குள்ளேயே இடமாக, ஒன்றுக்குள் ஒன்றாக, வெங்காயத் தோல்போல் உள்ளன‌. நமது உலகம் முப்பரிமாண இடத்தில் இருக்கிறது.
நம் புலன், கருவிகளுக்கும் புலப்படாமல் மற்ற பரிமாண இடங்கள் நீரில் உப்புபோல கலந்து, கரைந்து மறைவாக உள்ளன. ஒருவேளை, செர்ன் சோதனையில் ஒளியை விஞ்சிய வேகத்தில் வெளிப்பட்ட நியூட்ரினோ இன்னொரு பரிமாணம் வழியாக 'ஷார்ட் கட்' டில் வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஒருவேளை இது உண்மை ஆகும் பட்சத்தில், நம்மால் காலத்தில் முன்-பின்னாக செல்லமுடியும்; பிரபஞ்சத்தில் ஒருபக்கம் நுழைந்து இன்னொரு பக்கம் வெளிப்படமுடியும். விஞ்ஞானக் கதைகள் நிஜமாகலாம், புராண நிகழ்ச்சிகள் உண்மையாகலாம்.